புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு


புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Jun 2021 11:45 AM GMT (Updated: 4 Jun 2021 11:45 AM GMT)

புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது.

புதுச்சேரி, 

கொரோனாவை தடுக்க ஒரே வழி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதுதான். முதியோர், நடுத்தர மக்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப் படுகிறது.

18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலைதான் உள்ளது. புதுவையில் 45 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் ஏறக்குறைய இப்பிரிவினர் 6 லட்சம் பேர் உள்ளனர். அனைவருக்கும் போட்டு முடிக்க பல ஆண்டுகள் ஆகும்.

மத்திய அரசை மட்டும் நம்பாமல் பிற மாநிலங்களை போல் வெளிநாடுகளிலும் கொரோனா தடுப்பூசியை வாங்குவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுக்க வேண்டும். கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு ஆண்டில் நடைபெறாத அளவு உயிர் இழப்பு நடந்துள்ளது. தடுப்பூசியும், ரெம்டெசிவிர் உள்ளிட்ட உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையும் தான் மிகுந்த தொற்றுக்கு காரணம். மருத்துவமனையில் சரியான உணவுகூட வழங்கப்படவில்லை. வரும் காலங் களிலாவது இச்சூழ்நிலை இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் வேண்டுகோள்.

ராகுல்காந்தி நாட்டு மக்கள் அனைவருக்கும் டிசம்பருக்குள் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதன்படி புதுச்சேரியிலும் அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போட வேண்டி கட்சி சார்பில் கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.

புதுச்சேரியில் ஆக்சிஜன் திட்டத்திற்காக முதன் முதலில் எனது நாடாளுமன்ற நிதியில் இருந்து ரூ.10 லட்சத்திற்கு அனுமதி வழங்கும் கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளேன். அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொண்டுவரும் வாகனம் வாங்கவும் பணம் வழங்கியுள்ளேன். இவை அனைத்திற்கும் மேலாக எனது சொந்த ஊதியத்தில் இருந்து ரூ.6.8 லட்சம் பணத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளேன்.

பிரதமரின் நிவாரண நிதி மட்டுமில்லை, கொரோனா தடுப்பூசியும் கூட எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. 1.5 லட்சம் தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் உள்ளது. புதுச்சேரியில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் தெரிவித்து தடுப்பூசியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. என்.ஆர்.காங்கிரசை பா.ஜ.க. எதிர்க்கட்சியாக தான் பார்க்கிறது. அதனால் தான் பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். முன்னதாக கருவடிக்குப்பம் மயான ஊழியர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமி நாசினியை வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story