100 சதவீதம் தடுப்பூசி போட்ட இளையான்குடி கிராமம் கலெக்டர் பாராட்டு
காரைக்கால் அருகே 100 சதவீதம் தடுப்பூசி போட்ட இளையான்குடி கிராமத்தை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா பாராட்டினார்.
காரைக்கால்,
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தொகுதியில் இளையான்குடி கிராமம் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடனும், சீரிய முயற்சியாலும் இந்த கிராமத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதையொட்டி நடந்த பாராட்டு விழாவில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த கிராம மக்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா நிருபர்களிடம் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்திலேயே இளையான்குடி கிராமம், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்ட கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கருக்கன்குடி, நரிகுரும்பை, முத்துச்சாவடி பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் கருக்கன்குடியில் 95 சதவீதமும், மற்ற கிராமங்களில் பெரும்பாலானோரும் தடுப்பூசி போட்டுள்ளனர். மக்களிடையே உள்ள தடுப்பூசி குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்கும் அரசு ஊழியர்களை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன் என்றார்.
சிவா எம்.எல்.ஏ. கூறுகையில், கொரோனா தொற்றை தடுக்கும் ஒரே மருந்து தடுப்பூசி தான். இதை திருநள்ளாறு இளையான்குடி கிராம மக்கள் நன்கு உணர்ந்து, தடுப்பூசியை போட்டுகொண்டுள்ளனர். இதற்காக அனைவரையும் பாராட்டுகிறேன். கொரோனா தொற்றை விரட்ட அனைவரும் எந்தவித தயக்கமும் இன்றி தடுப்பூசியை போட்டுகொள்ள வேண்டும் என்றார். இதற்கிடையே 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்ட இளையான்குடி கிராமத்துக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story