ரூ.9 லட்சம் கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி கொரோனாவுக்கு இறந்தவரின் உடலை கொடுக்க மறுப்பு
ரூ.9 லட்சம் கட்டணம் பாக்கி இருப்பதாக கூறி கொரோனாவுக்கு இறந்தவரின் உடலை கொடுக்க மறுப்பு தனியார் மருத்துவமனை முன்பு குடும்பத்தினர் போராட்டம்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹரோஹள்ளியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக அத்திபெலேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கணேசின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 15 நாட்களில் அவரது குடும்பத்தினர் ரூ.6 லட்சம் கட்டி இருந்தனர். ஆனால் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் கணேஷ் இறந்தார்.
இதுபற்றி தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர், கணேசின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து இருந்தனர். இதனால் அவரது உடலை பெற்று செல்ல குடும்பத்தினர் வந்தனர். அப்போது கணேசுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த வகையில் ரூ.9 லட்சம் பாக்கி உள்ளது. அதை செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் தங்களிடம் பணம் இல்லை என்று குடும்பத்தினர் கூறியதால் கணேசின் உடலை கொடுக்க மருத்துவமனை மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். இதுபற்றி அறிந்த அத்திபெலே போலீசார் அங்கு சென்று கணேசின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
Related Tags :
Next Story