காவலாளியை கட்டி போட்டு ஷோரூமுக்குள் புகுந்து விலையுயர்ந்த காரை திருடிய வழக்கில் வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது
பெங்களூருவில், காவலாளியை கட்டி போட்டு ஷோரூமுக்குள் புகுந்து விலையுயர்ந்த காரை திருடிய வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.65 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு எலகங்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோகிலு கிராஸ் பகுதியில் கார் விற்பனை நிலையம் (ஷோரூம்) உள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி அதிகாலை 4 மணியளவில் அந்த ஷோரூமுக்கு வந்த 2 பேர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலாளியை கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் காவலாளியை கட்டி போட்ட 2 பேரும், அவரிடம் இருந்த சாவியை எடுத்து கொண்டு ஷோரூமுக்குள் புகுந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான காரை 2 பேரும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஷோரூமின் மேலாளர் கொடுத்த புகாரின்பேரில் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காரை திருடிய 2 பேரை பிடிக்க வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சி.கே.பாபா உத்தரவின்பேரில் எலகங்கா உதவி கமிஷனர் ஜெயராம், எலகங்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்ய தீவிரம் காட்டினார்கள். மேலும் ஷோரூமில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து 2 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில் எலகங்கா போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின்பேரில் ஷோரூமுக்குள் புகுந்து காரை திருடியதாக பெங்களூரு சம்பிகேஹள்ளி அருகே திருமனஹள்ளியில் ஒரு வீட்டில் தங்கி இருந்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவை சேர்ந்த சபி ஈடன் குமா தகேர் பென் ஹமீது (வயது 27), கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியாவை சேர்ந்த ஜான் நீரோ (25) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் படிப்புக்கான விசாவில் இந்தியா வந்து உள்ளனர். மேலும் பெங்களூருவில் தங்கி இருந்து தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் சபி ஈடன் எம்.ஏ. அரசியல் அறிவியலும், ஜான் நீரோ பி.இ. என்ஜினீரியங் படிப்பும் படித்து வந்து உள்ளனர். ஆனால் அவர்கள் 2 பேரும் படிப்பை பாதியிலேயே கைவிட்டு உள்ளனர்.
பின்னர் மது, போதைப்பொருட்களுக்கு அடிமையான இவர்கள் 2 பேரும் பணத்திற்காக வாகனங்களை திருடி விற்று உள்ளனர். எலகங்கா பகுதியில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார், கே.ஜி.ஹள்ளி, சம்பிகேஹள்ளி பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை விற்று ஆடம்பரமாக செலவு செய்து வந்து வந்ததும் தெரியவந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஷோரூமில் இருந்து திருடப்பட்ட கார் உள்பட 3 கார்கள், 2 இருச்ககர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். கைதான 2 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் 2 பேரும் கைதாகி இருப்பதன் மூலம் 2 கொள்ளை, 4 வாகன திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story