துமகூருவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட 10 மாத குழந்தையின் கதி என்ன? வாலிபர், இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை
துமகூருவில் கள்ளக்காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தையின் கதி என்ன? என்பது தெரியாமல் உள்ளது. இதுதொடர்பாக வாலிபர், இளம்பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது.
துமகூரு,
ராமநகர் மாவட்டம் பிடதியை சேர்ந்தவர் சித்திக். இவர் 2 பெண்களை திருமணம் செய்து இருந்தார். இதுபோல துமகூரு டவுனை சேர்ந்தவர் சல்மா. இவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தொழிற்சாலையில் சித்திக்கும், சல்மாவும் வேலை செய்தனர்.
அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 2 பேரும் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சித்திக்கை, சல்மா பிரிந்தார். பின்னர் அவர் துமகூருவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சல்மாவின் வீட்டிற்கு சென்ற சித்திக், அங்கு விளையாடி கொண்டு இருந்த சல்மாவின் சகோதரரின் 10 மாத குழந்தையை கடத்தி சென்று உள்ளார். பின்னர் சல்மாவின் சகோதரருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சித்திக், சல்மாவை அனுப்பி வைத்தால் தான் குழந்தையை தருவேன் என்று கூறியுள்ளார். மேலும் தான் மைசூருவில் இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து சல்மாவை அவரது குடும்பத்தினர் மைசூருவுக்கு அனுப்பி வைத்து குழந்தை வாங்கி வரும்படி கூறி இருந்தனர். ஆனால் மைசூருவுக்கு சென்ற சல்மாவும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து சல்மாவின் குடும்பத்தினர் துமகூரு டவுன் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதன்பேரில் போலீசார் சல்மா, குழந்தையை தேடிவந்தனர். இந்த நிலையில் சித்திக்கும், சல்மாவும் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சித்திக், சல்மாவை பிடித்தனர். பின்னர் குழந்தை குறித்து விசாரித்த போது குழந்தையை கொன்று ஹேமாவதி கால்வாயில் வீசி விட்டதாக சித்திக் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சித்திக், சல்மாவை பிடித்து கட்டி வைத்து போலீசார் முன்பே அடித்து உதைத்தனர். அப்போது அடிதாங்க முடியாமல் குழந்தையை கொலை செய்யவில்லை.
தனக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். இதன்பின்னர் சித்திக், சல்மாவை போலீசார் துமகூருவுக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். சித்திக் மாற்றி, மாற்றி பேசி வருவதால் குழந்தையின் கதி என்ன? என்பது தெரியவில்லை. விசாரணை முடிந்த பின்னரே குழந்தையின் கதி என்ன? என்பது தெரியவரும்.
Related Tags :
Next Story