ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள்


ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ டிரைவர்கள்
x
தினத்தந்தி 4 Jun 2021 8:55 PM IST (Updated: 4 Jun 2021 8:55 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் ஊரடங்கினால் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். எனவே தங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் 400-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 95 ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. ஊரடங்கு உத்தரவினால் இந்த ஆட்டோக்கள் ஓடுவதற்கு அனுமதி இல்லை என்பதால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அதன் டிரைவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் அடுத்தவரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்களில் பலர் தங்களது சொத்து பத்திரங்கள், நகைகளை அடகு வைத்தும், வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும் ஆட்டோக்களை வாங்கியவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரடங்கு உத்தரவு அவர்களுடைய வாழ்க்கையில் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஷேர் ஆட்டோ, ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

உதவித்தொகை

ஷேர் ஆட்டோ டிரைவர்கள் சங்க தலைவர் இளையராஜா:-
விழுப்புரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்த ஷேர் ஆட்டோ தொழிலை நம்பி 200 குடும்பங்கள் உள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் எங்கள் சவாரி முற்றிலும் முடங்கியுள்ளது. வாழ வழியின்றி தவித்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் பசியும், பட்டினியுமாக இருக்கிறார்கள். அடுத்தவர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு குடும்பத்தை சமாளித்து வருகிறோம். அரசு எங்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காவல்துறையினர், மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை இருந்த அரசு, எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. தற்போது தி.மு.க. அரசு, எங்களுக்கு உதவி செய்யும் என்று ஒட்டுமொத்த ஷேர் ஆட்டோ டிரைவர்களும் நம்பியிருக்கிறோம்.

வாழ்வாதாரம் பாதிப்பு 

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர் கதிரவன்:-
நாங்கள் தினமும் ஆட்டோ ஓட்டித்தான் குடும்பத்தை காப்பாற்றி வருவதோடு குழந்தைகளின் படிப்பு செலவையும் கவனித்து வருகிறோம். எங்களில் பலர் தவணை முறையில் புதிய ஆட்டோ வாங்கி ஓட்டி வருகின்றனர். அந்த ஆட்டோக்களுக்கு மாதம், மாதம் தவணை தொகை செலுத்த வேண்டும். தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவினால் ஒரு ரூபாய்க்கு கூட வழியில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் பள்ளி, கல்லூரிகள் திறந்தால் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம். எங்கள் டிரைவர்களில் பலர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லை. எனவே நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத டிரைவர்களுக்கும் பாகுபாடின்றி அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். ஏற்கனவே ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஒரே வாரத்தில் செலவாகி விட்டது. அந்தளவிற்கு விலைவாசி உயர்வு உள்ளது. ஒட்டுமொத்தமாக எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில் அரசு எங்களுக்கு கருணை கூர்ந்து உதவி செய்தால் கோடி நன்றியை தெரிவிப்போம்.

ஆட்டோ இயக்க அனுமதி 

விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்தன்:-
கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஆட்டோ டிரைவர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு நாங்கள் வருமானமின்றி தவித்து வருகிறோம். இதனால் சவாரி இல்லாமல் எங்களது ஆட்டோக்களை வீட்டின் முன்பு ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு நாங்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளோம். மருத்துவ தேவை உள்ளிட்ட மிகவும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் ஒன்றிரண்டு ஆட்டோக்கள் ஓடுகிறது. அதுவும் போலீசாரின் சோதனை, கெடுபிடிக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் இயக்கப்படுகின்றன. ஊரடங்கால் வீட்டு வாடகை, ஆட்டோ வாடகை கொடுக்க முடியாத நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளோம். ஆட்டோக்கள் மட்டும் இயக்க அனுமதியளித்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட பலரை ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச்செல்ல மிகவும் வசதியாக இருக்கும். இதன் மூலம் அவர்களும் பயனடைவதுடன் எங்களுக்கும் அன்றாடம் வருமானம் கிடைக்கும்.

Next Story