கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., கல்லூரி டீன் குந்தவி தேவி, சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்களுடன் கொரோனா பாதிப்பு குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவமனைகளில் கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு விவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் ஆக்சிஜன் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த அறையை பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வல்லுநர் குழு அமைப்பு
தமிழகத்தில் மே மாதம் 11-ந் தேதிக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் அதிகரித்ததற்கு மூச்சுத் திணறல் அதிகமான பிறகு மருத்துவமனைக்கு வந்ததே காரணம். கொரோனா அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக குணப்படுத்த முடியும்.
எதிர் வரும் அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே குழந்தைகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடங்கியுள்ளோம். மருத்துவ வல்லுநர் குழு அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
படிப்படியாக தடுப்பூசி...
தமிழகத்திற்கு மத்திய அரசு படிப்படியாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலும் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தேவையான மருந்துகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story