முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு


முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 10:01 PM IST (Updated: 4 Jun 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தனர்.

ஆண்டிப்பட்டி:
மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தனர். முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
வைகை அணை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதல் போக பாசன நிலங்களின் விவசாய பயன்பாட்டிற்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 
ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாததால் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லை. இதன்காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தாமதமாக ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடைசியாக 2008-ம் ஆண்டு ஜூன் மாத தொடக்கத்தில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் இந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 68 அடியாக காணப்பட்டது. இதையடுத்து பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் போக பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 
இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் இ.பெரியசாமி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மதுரை கலெக்டர் அனீஷ் சேகர், திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு மதகுகளை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். அப்போது அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வைகை அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக வெளியேறி, வெள்ளமென கால்வாய் நோக்கி பாய்ந்தோடியது. 
இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
12 ஆண்டுகளுக்கு பிறகு...
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கால்வாய் வழியாக 120 நாட்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அடுத்து வரும் நாட்களில் தண்ணீரின் இருப்பை பொறுத்து முறைவைத்தும் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16 ஆயிரத்து 452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள 26 ஆயிரத்து 792 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்தனர்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணையில் இருந்து ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story