தூத்துக்குடியில் கொரோனா ஊரடங்கிலும் அணிவகுத்த வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு


தூத்துக்குடியில் கொரோனா ஊரடங்கிலும் அணிவகுத்த வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Jun 2021 10:40 PM IST (Updated: 4 Jun 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனா ஊரடங்கிலும் நேற்று ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் நேற்று ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தளர்வு இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகர பகுதியிலும் பெரும்பாலான சாலைகளை போலீசார் தடுப்புகள் கொண்டு அடைத்து உள்ளனர். ஓரிரு சாலைகளில் மட்டுமே போக்குவரத்து உள்ளது. இந்த சாலைகளிலும் போலீசார் சோதனைச்சாவடி வைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர். அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு, வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று கொரோனா பரிசோதனையும் செய்து வருகின்றனர்.

வாகனங்கள் அணிவகுப்பு

இதைத் தொடர்ந்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் சில நாட்களில் வாகன போக்குவரத்து பலமடங்கு அதிகரித்து விடுகிறது. இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உருவாகிறது. அதன்படி நேற்று காலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் அருகே போலீசார் வாகனங்களை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான வாகனங்கள் அங்கு அணிவகுத்து நின்ற காட்சி பிரமிக்க வைத்தது. பலர் இ-பதிவு செய்து இருப்பதாக ஆவணங்களை காண்பித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

இதேபோன்று பல ரோடுகளில் வாகன போக்குவரத்து கணிசமாக அதிகரித்து இருந்தது. இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடையாள அட்டை அணிந்து இருந்தாலும் நிறுத்தி நீண்ட நேரம் விசாரணை நடத்தும் போலீசார் கார்களை கண்டால் சற்று ஒதுங்கியே நிற்கின்றனர். இதனால் கார்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Next Story