கிராமப்புறங்களில், நோய்த்தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை கலெக்டர் உத்தரவு


கிராமப்புறங்களில், நோய்த்தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Jun 2021 11:05 PM IST (Updated: 4 Jun 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில், நோய்த்தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு, வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரிசோதனை

ஊரடங்கு நாட்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மருத்துவத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்து, நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வேண்டும்.

 அவர்களை கொரோனா சிகிச்சை மையத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை 10 முதல் 20 நபர்கள் வரை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, தொற்று பரவாமல் கட்டுப்படுத்த வேண்டும். 

பொதுமக்கள் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசி

தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. காய்ச்சல் முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பாதிப்பு குறைந்து வருகிறது. 

தடுப்பூசி போடும் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பாலசுப்பிரமணியம் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஶ்ரீ அபிநவ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்திரன், சப்-கலெக்டர்கள் பிரவீன்குமார், மதுபாலன், நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) கார்த்திகேயன், கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story