குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை


குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2021 11:22 PM IST (Updated: 4 Jun 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி, ஜூன்:
தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

குழந்தை திருமணம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் குழந்தை திருமணங்கள் பரவலாக நடைபெறுவது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் மாநில அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அலுவலர்களுடன் கானொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கடுங்காவல் தண்டனை

அதன்படி திருமண சட்டத்தின் படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்வது சட்டப்படி தவறாகும். இதுபோன்று குறைந்த வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், ஊக்குவிப்பவர்கள் மீதும், திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை அல்லது ரூ.1 லட்சம் அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்ந்து விதிக்கப்படும்.

தகவல் தெரிவிக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெற உள்ளது குறித்து யாரேனும் தகவல்களை அறிந்தால், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை 0461-2325606, சைல்டு லைன் 1098 என்ற எண்ணிலும், மகளிர் உதவி எண் 181 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story