கொரோனாவுக்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பலி


கொரோனாவுக்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பலி
x
தினத்தந்தி 4 Jun 2021 11:43 PM IST (Updated: 4 Jun 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் கொரோனாவுக்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பலியானார்.

சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டையில் கொரோனாவுக்கு துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பலியானார்.

கொரோனாவுக்கு அதிகாரி பலி

  கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெயமோகன்தாஸ் (வயது 54). இவர் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ஜெயமோகன்தாஸ்  பரிதாபமாக இறந்தார். இது சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

103 பேருக்கு தொற்று

மேலும் பொள்ளாச்சி நகரில் 7 பேர், வடக்கு ஒன்றியத்தில் 22 பேர், தெற்கு ஒன்றியத்தில் 11 பேர், ஆனைமலை ஒன்றியத்தில் 7 பேர், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 23 பேர், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 31 பேர், வால்பாறை தாலுகாவில் 2 பேர் என்று மொத்தம் 103 பேருக்கு கொரோனா உறுதியானது.

  இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15 இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 724 பேர் கலந்துகொண்டனர். அதில் 348 பேரிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்றனர்.

பாதை அடைப்பு

  பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், குள்ளக்காபாளையம் ஊராட்சியில் 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டதில் 40 பேர் குணமடைந்தனர். 10 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இதனால் அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது.

  தொடர்ந்து அங்கு அதிகாரிகள் கண்காணித்து வருவதுடன், அந்தப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  

Next Story