நெல்லையில் வீடு வீடாக பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
நெல்லை மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை நடத்தி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தலைமையில் சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன் பகுதிகளில் நேற்று வீடுகளில் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் முக்கிய இடங்களில் காய்ச்சல் கண்டறிதல், கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், இளங்கோ, முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதிலும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அங்கு ஏராளமானவர்கள் திரண்டு வந்து தடுப்பூசி போட்டு செல்கிறார்கள்.
கடந்த 2-ந் தேதி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கும் தடுப்பூசி போட மறுத்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்களுக்கு முதல் தடுப்பூசி போட்ட கால நிர்ணயத்தின் அளவின்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story