கொரோனா அச்சத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை


கொரோனா அச்சத்தில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2021 12:59 AM IST (Updated: 5 Jun 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோய் அச்சத்தில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி, 
கொரோனா நோய் அச்சத்தில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கணவன்-மனைவி 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டி கலைஞர் தெருவை சேர்ந்தவர், பெருமாள் (வயது 70). இவருடைய மனைவி தெய்வானை. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மூத்த மகன் இறந்துவிட்டார். இந்த நிலையில் முதுமை காரணமாக பெருமாளுக்கும், மனைவி தெய்வானைக்கும் அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களது 2-வது மகன் முத்துமணியிடம், எங்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருக்கும். நாங்கள் பிழைக்க மாட்டோம் என்றும், அதனால் வெளியூரில் வசித்து வரும் 2 மகள்களையும், பேரனையும் எங்களை பார்த்துவிட்டு செல்ல தகவல் ெசால்லிவிடு என்று கூறி உள்ளனர். 
இதை தொடர்ந்து முத்துமணி தனது சகோதரிகளுக்கும், அண்ணன் மகனுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி அவர்கள் சிவகாசிக்கு வந்து தங்களது பெற்றோரை பார்த்து ஆறுதல் கூறினர். 
அப்போது, உங்களுக்கு நோய் பாதிப்பு எதுவும் இருக்காது. ஆஸ்பத்திரிக்கு சென்று கொேரானா பரிசோதனை செய்யலாம் என்று கூறி உள்ளனர். அதற்கு பெருமாளும், தெய்வானையும் அதிக செலவு ஆகும். நம்மிடம் அதற்கான வசதி இல்லை என்று கூறி உள்ளனர்.
விஷம் குடித்தனர்
இந்த நிலையில் மகள்கள் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த போது வீட்டின் உள்ளே பெருமாளும், அவரது மனைவி தெய்வானையும் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளனர். 
இதை கவனித்து, வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து ஆம்புலன்சில் இருவரையும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பெருமாளும், தெய்வானையும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இது குறித்து அவர்களுடைய மகன் முத்துமணி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
கொரோனா நோய் அச்சத்தில் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்த விபரீத சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story