திருச்சியில் மும்பை நிதி நிறுவன அதிபரை எரித்து கொல்ல முயற்சி 2 பேர் கைது


திருச்சியில்  மும்பை நிதி நிறுவன அதிபரை எரித்து கொல்ல முயற்சி 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 1:03 AM IST (Updated: 5 Jun 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

மும்பை நிதிநிறுவன அதிபரை திருச்சியில் எரித்துக் கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

மும்பை நிதிநிறுவன அதிபரை திருச்சியில் எரித்துக் கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை நிதி நிறுவன அதிபர் 

மராட்டிய மாநிலம் மும்பை பி.டி.ரோட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மிட்டல்ஷா (வயது 38). தொழிலதிபரான இவர் மும்பையில் பணம் முதலீடு செய்து லாபம் ஈட்டும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.
இவரது நிறுவனத்தில் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த கோபிநாத் (39) ரூ.20 லட்சம் முதலீடு செய்து இருந்தார். ஆனால் அந்த பணத்தை மிட்டல்ஷா திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. 

அவரிடம் தொடர்ந்து பணத்தை கேட்டு வற்புறுத்தி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் மிட்டல்ஷா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தார். அங்கு ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவரை சென்னை திருவேற்காடு தம்புசாமிநகரைச் சேர்ந்தவரும், கோபிநாத்தின் நண்பருமான முனியப்பன் (43) சந்தித்தார்.

எரித்து கொல்ல முயற்சி

அப்போது அவர், கோபிநாத்துக்கு கொடுக்க வேண்டிய ரூ.20 லட்சம் தொடர்பான பிரச்சினையை திருச்சிக்கு சென்று தீர்த்து வைப்பதாக கூறினார். இதையடுத்து கடந்த மாதம் 7-ந் தேதி மிட்டல்ஷா முனியப்பனுடன் திருச்சிக்கு வந்தார். 
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கினர். 14-ந்தேதி கோபிநாத்தும், முனியப்பனும் பணத்தை கேட்டு ஓட்டல் அறையில் தங்கியிருந்த மிட்டல்ஷாவை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் அவருக்கு வயிறு, கைகளில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் அலறி துடித்த அவருக்கு ஓட்டல் அறையிலேயே வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

2 பேர் கைது

நீண்ட நாட்களாகியும் மிட்டல்ஷா பணத்தை தராததால் நேற்றுமுன்தினம் மாலை அவரை ஓட்டலில் இருந்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். அவர்களுடைய கார் மத்திய பஸ் நிலையம் அருகே சென்றபோது, மிட்டல்ஷா கூச்சலிட்டார். 

உடனே அவரை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு இருவரும் தப்பிச்சென்றனர். காயங்களுடன் இருந்த அவர் இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிவு செய்து கோபிநாத், முனியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story