நெல்லை ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
கொரோனா பரவல் குறைந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து மும்பைக்கு மக்கள் புறப்பட்டனர். இதனால் நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் மும்பையில் வேலை செய்து வருகின்றனர். சிலர் இட்லி கடை மற்றும் பல்வேறு தொழில்களையும் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் வசித்த தமிழகத்தைச் சேர்ந்த பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் மும்பையில் கொரோனா பரவல் குறைந்ததால், தமிழகத்தில் இருந்து பலரும் மீண்டும் அங்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து மும்பை செல்லும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக மும்பைக்கு நேற்று காலையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள் உடைமைகளுடன் நெல்லை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
எனவே ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதித்தனர். பயணிகளை வழியனுப்ப வந்தவர்களை ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. முககவசம் அணிந்து வந்த பயணிகளுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை செய்து, ரெயிலில் சமூக இடைவெளியுடன் பயணம் செய்வதற்கு அனுமதித்தனர்.
Related Tags :
Next Story