சாலைகளில் ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்


சாலைகளில் ஆர்ப்பரித்து செல்லும் வாகனங்கள்
x
தினத்தந்தி 5 Jun 2021 1:38 AM IST (Updated: 5 Jun 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்டு சாலைகளில் வாகனங்கள் ஆர்ப்பரித்து செல்கின்றன.

திண்டுக்கல்: 

கொரோனா ஊரடங்கு 
உருமாறிய கொரோனா உலகையே ஒருவழியாக்கி வருகிறது. தினமும் ஏராளமானோர் தொற்றுக்கு உள்ளாவதோடு, நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலால் பலர் இறக்கின்றனர். இதனால் கொரோனாவை ஒழிக்க முடியாமல் அனைத்து நாடுகளும் தவிக்கின்றன. 

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2 வாரத்துக்கு முன்பு தினமும் 35 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது.

இதனால் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்து உள்ளது. ஆனால், இறப்பு விகிதம் தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. அதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது.

ஊர் சுற்றும் மக்கள்
ஆனால் ஊரடங்கு விதிகளை மதிக்காமலும், கொரோனா பற்றிய அச்சம் சிறிதும் இல்லாமலும் சிலர் வெளியே சுற்றித் திரிகின்றனர். அதுபோன்ற நபர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்தாலும் அத்துமீறுகின்றனர். 

அந்த வகையில் திண்டுக்கல்லிலும் ஊரடங்கை மதிக்காமல் பலர் சுற்றித்திரிவதை பார்க்க முடிகிறது. தினமும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருவதாக கூறி உலாவருகின்றனர்.

அவ்வாறு மாவட்டம் முழுவதும் தேவையின்றி ஊர் சுற்றிய 5 ஆயிரம் பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. எனினும், திண்டுக்கல் நகர சாலைகளில் அணிவகுப்பு போன்று வாகனங்களில் ஊர் சுற்றுகின்றனர். 

அரசு மற்றும் தனியார் பஸ்களை மட்டும் தான் பார்க்க முடியவில்லை. மற்றபடி அனைத்து வாகனங்களும் சாலையில் செல்கின்றனர்.

திண்டுக்கல்லில் நேற்று பகலில் கடுமையான வெயில் கொளுத்தியதையும் பொருட்படுத்தாமல் பலர் வாகனங்களில் வலம் வந்தனர். இதற்கிடையே மாலையில் நல்ல மழை பெய்தது. 

அந்த மழையிலும் சிலர் வாகனங்களில் சுற்றித் திரிந்தனர். கொளுத்தும் வெயிலோ, கொட்டும் மழையோ நகர்வலத்தை நிறுத்துவது இல்லை என்பது போன்று சுற்றினர்.

பூட்டிய கடைகள் முன்பு 
ஒருபுறம் வாகனங்கள் வைத்திருக்கும் நபர்கள், நகர்வலம் போன்று சுற்றி கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் வாகனங்கள் இல்லாதவர்கள் வீட்டில் இருக்காமல் பூட்டி கிடக்கும் கடைகளின் முன்பு அமர்ந்து ஒய்யாரமாக அமர்ந்து கொள்கின்றனர். 

இதுபோன்ற காட்சிகளை நாகல்நகர், ரதவீதிகளில் பார்க்க முடிகிறது. கடைகளின் முன்பு நெருக்கமாக அமர்ந்து கொண்டு வாகன போக்குவரத்தை ரசிக்கின்றனர்.

இதில் பெரும்பாலானவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். அந்த வயதில் நோய் உள்ளவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். 

அதை பற்றி கவலைப்படாமல், கொரோனா அச்சமின்றி கதை பேசி மகிழ்கின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story