ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2021 2:01 AM IST (Updated: 5 Jun 2021 2:01 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கும்பகோணத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம்;
பெங்களூருவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கும்பகோணத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாருக்கு ரகசிய தகவல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து சரக்கு லாரி மூலம் மதுபாட்டில்கள் கும்பகோணம் பகுதிக்கு கடத்தி வரப்படுவதாக கும்பகோணம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தனிப்படை போலீசார் கும்பகோணம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நேற்று மாலை கும்பகோணம்-தாராசுரம் பைபாஸ் சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
லாரியை மடக்கி சோதனை
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த தனிப்படை போலீசார் உடனடியாக அந்த லாரியை விரட்டி சென்று கும்பகோணம்-சென்னை பைபாஸ் சாலையில் மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர். 
பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் கால்நடை தீவனம், காலியான காய்கறி பெட்டி ஆகியவற்றில் மறைத்து மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. 
ரூ.10 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபாட்டில்களை  பறிமுதல் செய்த போலீசார், லாரியை ஓட்டி வந்த டிரைவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செம்பனூர் பகுதியை சேர்ந்த சேவுகன் மகன் முருகையன்(வயது 32) மற்றும் அவருடன் வந்த 16 வயது சிறுவன், கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(33) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி சிறுவன் உள்பட 3 பேரையும் 
மேலும் லாரியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,616 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. 
தக்காளி
இது குறித்து போலீசார் கூறியதாவது 
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப் பட்டிருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மது பாட்டில் கடத்தலில் தொடர்புடைய கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினோம். 
விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு பகுதியை சேர்ந்த ஒருவரின் தலைமையின் கீழ் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதிக்கு தக்காளி லோடு ஏற்றிச்செல்வதற்காக சரக்கு லாரிக்கு இ- பாஸ் எடுத்து லாரி கண்ணாடியில் அத்தியாவசிய தேவை என நோட்டீஸ் ஒட்டிக்கொண்டு வாரத்துக்கு இரண்டு முறை தமிழகத்தில் இருந்து தக்காளிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரு சென்றுள்ளார். 
சோதனை சாவடி
அங்கிருந்து திரும்பும்போது பெங்களூரு பகுதியில் இருந்து ஏராளமான மதுபாட்டில்களை கடத்தி வந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 
பெங்களூரு முதல் கும்பகோணம் வரை பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். அத்தியாவசிய தேவை என குறிப்பிட்டிருப்பதால் சோதனை சாவடிகளில் போலீசார் சரக்கு லாரிக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் இதை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய லாரி உரிமையாளர் ஜெயக்குமாரை தேடி வருகிறோம்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

Next Story