ரெயிலில் இருந்து 7 டேங்கர்கள் தனியாக கழன்று நடுவழியில் நின்றன


ரெயிலில் இருந்து 7 டேங்கர்கள் தனியாக கழன்று நடுவழியில் நின்றன
x
தினத்தந்தி 5 Jun 2021 2:13 AM IST (Updated: 5 Jun 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

டீசல் ஏற்றி வந்த ரெயிலில் இருந்து 7 டேங்கர்கள் தனியாக கழன்று நடுவழியில் நின்றன. கழன்றது தெரியாமல் டிரைவர், 4 கி.மீ. தூரம் ரெயிலை இயக்கினார்.

நாகர்கோவில்:
டீசல் ஏற்றி வந்த ரெயிலில் இருந்து 7 டேங்கர்கள் தனியாக கழன்று நடுவழியில் நின்றன. கழன்றது தெரியாமல் டிரைவர், 4 கி.மீ. தூரம் ரெயிலை இயக்கினார்.
நாகர்கோவில் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
டேங்கர் தனியாக கழன்றது
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நெல்லைக்கு டீசலை ஏற்றிக் கொண்டு சரக்கு ரெயில் புறப்பட்டது. 52 டேங்கருடன் இணைக்கப்பட்ட இந்த ரெயில் நேற்று அதிகாலை குழித்துறை அருகே வந்தபோது பின்னால் இருந்த 46-வது டேங்கர் திடீரென தனியாக கழன்றது. இதனால் கடைசி 7 டேங்கர்கள் மட்டும் சரக்கு ரெயிலில் இருந்து பிரிந்தன. 
இதனை அறியாத டிரைவர் தொடர்ந்து ரெயிலை இயக்கினார். இதற்கிடையே கழன்ற டேங்கர்களின் வேகம் படிப்படியாக குறைந்தபடி தண்டவாளத்தில் சென்றது. கழன்ற கடைசி டேங்கரில் பயணித்த ஊழியர், டிரைவர் வேகத்தை குறைத்து ஓட்டுகிறாரோ என நினைத்துள்ளார். அதன் பிறகும் வேகம் குறைந்ததால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
ரெயிலை இயக்கிய டிரைவர்
உடனே அவர் என்ஜின் டிரைவரை, வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு, ரெயிலை வேகம் குறைத்து இயக்குவது ஏன்? என்று கேட்டுள்ளார். நான் எப்போதும் போல் தான் ரெயிலை இயக்குவதாக அவர் பதிலளித்துள்ளார். இதனால் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை ஊழியர் உணர்ந்தார். இதற்கிடையே தனியாக பிரிந்த டேங்கர்களும்    நடுவழியில் நின்றன.
அதன் பிறகு தான், ரெயிலில் இருந்து 7 டேங்கர்கள் தனியாக கழன்றது அவருக்கு தெரியவந்தது. இதனை அறிந்த டிரைவரும், ரெயிலை நிறுத்தி விட்டார். ஆனால், அதற்குள் 4 கி.மீ தூரம் ரெயில் கடந்து சென்று விட்டது.
பெரும் விபத்து தவிர்ப்பு
இதையடுத்து நாகர்கோவில் ரெயில்வே அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து துரித நடவடிக்கையில் ஈடுபட்டனர். 46-வது டேங்கரில் இணைக்கப்பட்ட பகுதி உடைந்ததால், தனியாக கழன்றது தெரிய வந்தது.
பின்னர் அந்த ரெயில் பின்னோக்கி கொண்டு செல்லப்பட்டது. 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, கழன்ற டேங்கர்கள் மீண்டும் ரெயிலில் இணைக்கப்பட்டது. அதன்பிறகு ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது. இந்த விபத்தின் போது, சரக்கு ரெயிலில் இருந்து தனியாக கழன்ற டேங்கர்கள், அதிர்ஷ்டவசமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரளவில்லை. மேலும் அந்த சமயத்தில் வேறு எந்த ரெயிலும் வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை
இந்த சம்பவத்தால் நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு சென்ற பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் இரணியல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் 3 மணி நேரத்துக்கு பிறகு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது. அதாவது நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 5 மணிக்கு நெய்யாற்றின்கரை செல்ல வேண்டிய ரெயிலானது 8 மணிக்கு சென்றது.
சரக்கு ரெயிலில் இருந்து டேங்கர் தனியாக கழன்றது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story