மண்டைக்காடு கோவில் பழமை மாறாமல் சீரமைக்கப்படும்
மண்டைக்காடு கோவிலில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு கோவிலில் பழமை மாறாமல் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மண்டைக்காடு கோவில்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் கருவறை மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் கருவறையில் இருந்த பூஜை பொருட்கள், துணிகள் போன்றவையும் சேதமடைந்தன.
இந்த தீ விபத்து குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பார்வையிட்டார்
இந்தநிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று மண்டைக்காடு கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் கோவிலில் தீ விபத்தால் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளுடம் விவரங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
மண்டைக்காட்டில் புற்று வடிவில் காட்சியளிக்கும் பகவதியம்மன் கோவிலின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்த தகவல் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பி வைத்து ஆய்வு செய்ய கூறினார்.
பக்தர்களின் மனம் புண்படாமல்
இது சக்தி வாய்ந்த கோவில். சன்னிதானம் சேதமாகவில்லை. என்னையும் முதல்-அமைச்சர் அனுப்பி வைத்துள்ளார். பக்தர்களின் மனம் புண்படாமல் இந்து அறநிலையத்துறை வெளிப்படையாக செயல் பட முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
கோவில் சீரமைப்பு பணி பழமை மாறாமல், ஆகம விதிகளுடன் புனரமைக்கப்படும். போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவ பிரசன்னம் பார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்படி கோவிலை பாதுகாக்க புனரமைப்பு பணி நடக்கும். அனைவரும் பாராட்டும் வகையில் பணி செய்து முடிக்கப்படும்.
அரசியல் ரீதியாக பார்க்க..
அதற்கான முழு செலவையும் தமிழக அரசு ஏற்கும் என முதல்- அமைச்சர் அறிவித்துள்ளார். கோவில் மேற்கூரையை தங்கத்தால் பதிக்க வேண்டும் என மாநில பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். பக்தர்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பணி முடிக்கப்படும்.
தீ விபத்து குறித்து கண்டறிய கலெக்டர் உள்பட 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. 8 பேர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையை கலெக்டர், முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைப்பார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனோ தங்கராஜ்-கலெக்டர்
ஆய்வின்போது அறநிலையத்துறை செயலாளர் சந்திர மோகன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.பி. விஜய்வசந்த், மாவட்ட கலெக்டர் அரவிந்த், சப்- கலெக்டர் சிவகுரு பிரபாகரன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், எம்.ஆர்.காந்தி, விஜயதரணி, முன்னாள் எம்.எல்.ஏ.ஆஸ்டின், துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, தாசில்தார் பாண்டியம்மாள், திருக்கோவில் இணை ஆணையர் செல்வராஜ்,
மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் கலாராணி, இந்து கோவில்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் ஸ்ரீபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story