ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் குமரியில் பலத்த மழை


ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் குமரியில் பலத்த மழை
x
தினத்தந்தி 5 Jun 2021 2:36 AM IST (Updated: 5 Jun 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்ததால், சிற்றார்-1 அணை பகுதியில் 144.8 மி.மீ. மழை பதிவானது. இதைத்தொடர்ந்து அணைகளில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்ததால், சிற்றார்-1 அணை பகுதியில் 144.8 மி.மீ. மழை பதிவானது. இதைத்தொடர்ந்து அணைகளில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீண்டும் கனமழை
அரபிக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. பின்னர் மழை ஓய்ந்த நிலையில் வெயிலின் தாக்கம் இருந்தது.
இந்தநிலையில் ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் கனமழை நேற்றுமுன்தினம் இரவு பெய்தது. நாகர்கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இரவு சுமார் 10 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. மேலும் மலையோர பகுதிகள், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
144.8 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார்-1 அணை பகுதியில் 144.8 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-
பேச்சிப்பாறை-113.8, பெருஞ்சாணி-102.5, சிற்றார் 2-117, மாம்பழத்துறையாறு-55.2, முக்கடல்-77, பூதப்பாண்டி-52.4, களியல்-35, கன்னிமார்-104.8, கொட்டாரம்-2.4, குழித்துறை-19, மயிலாடி-24.2, நாகர்கோவில்-58.4, புத்தன்அணை-99.4, சுருளோடு-95.6, தக்கலை-12, பாலமோர்-83.4, ஆரல்வாய்மொழி-4.6, கோழிப்போர்விளை-32, அடையாமடை-42, குருந்தன்கோடு-11.4, முள்ளங்கினாவிளை-18 ஆனைகிடங்கு-53.2 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.
உபரிநீர் திறப்பு
மழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி 1,415 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 44.66 அடியாக இருந்தது. இதே போல 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 74.89 அடியாக இருந்தது. அணைக்கு 1,830 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நிரம்பியுள்ளது. சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணைகளும் நிரம்பி வருகிறது. அதாவது 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையில் 17.09 அடியும், சிற்றார்-2 அணையில் 17.19 அடியும் தண்ணீர் உள்ளது. சிற்றார்- 1 அணைக்கு 1,398 கனஅடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு 807 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 73 கனஅடி தண்ணீரும் வந்தது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையும் நிரம்பியது. அணைக்கு 11 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன. உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று காலை 2,273 கனஅடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 1,981 கனஅடியும், சிற்றார் 1 அணையில் இருந்து 1,307 கனஅடியும், சிற்றார் 2 அணையில் இருந்து 672 கனஅடியும் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
உபரிநீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அவர்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர். 
மேலும் திற்பரப்பு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதுதவிர பழையாற்றிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
மேலும் மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் ஒரு மரம் விழுந்தது. கல்குளம் தாலுகாவில் ஒரு வீடு முழுவதுமாகவும், ஒரு வீடு பாதி சேதமும் அடைந்துள்ளது. அதோடு தாழக்குடியில் இருந்து வெள்ளமடம் செல்லும் புத்தனாறு கால்வாய் சானல் கரையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. அந்த மின் கம்பம் சாலையின் குறுக்கே தடுப்பு போல கிடந்தது. அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் மின்தடை செய்யப்பட்டு மின்கம்பத்தை சரி செய்யும் பணி நடந்தது.

Next Story