தடுப்பூசி முகாமை பொதுமக்கள் முற்றுகை


தடுப்பூசி முகாமை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Jun 2021 2:52 AM IST (Updated: 5 Jun 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

கொேரானா தடுப்பூசி முகாமில் மர்ம நபர்கள் பரப்பிய தகறான தகவலால் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கரூர்
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அந்தவகையில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாவட்டத்திற்கு உட்பட்ட 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றும் அப்போது 3,790 டோஸ்கள் போடப்படும் என சுகாதாரத் துறை சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நகராட்சிக்கு உட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதிபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், தாந்தோணிமலை பழைய நகராட்சி அலுவலகம், சணப்பிரட்டி அரசுப்பள்ளி ஆகிய 4 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
குவிந்த பொதுமக்கள்
இதனையடுத்து இந்த முகாம்களில் காலை 6 மணி முதலே குவிந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகராட்சி அலுவலகத்தில் 120 டோஸ்கள் தடுப்பூசி போட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் சுமார் 8 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும், டோக்கன் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி போடப்பட மாட்டாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் விரக்தியில் பழைய நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவலறிந்த தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி டோக்கன் தேவையில்லை வரிசையில் நின்று வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனக் கூறி சமரசப்படுத்தினர். இதனையடுத்து காலை 9.30 மணி அளவில் கூடுதல் டோஸ்கள் வந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.


Next Story