தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளி பயணி தவறவிட்ட உடைமைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் சூர்யா ஜெயவர்தன். இவர் தனது சகோதரருடன் தஞ்சாவூர் சென்றுவிட்டு, நேற்று சென்னை திரும்பினார்.
தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த அவர்கள், தாம்பரத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக, தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கினர். சூர்யாவின் சகோதரர் மாற்றுத்திறனாளி என்பதால், கீழே இறங்கும் போது, அவரால் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இறங்க முடியவில்லை. இதனால் சூர்யா தங்களது உடைமைகளை எடுக்காமல், அவரது சகோதரரை பத்திரமாக கீழே இறக்கிவிடும் நோக்கத்தில் மட்டுமே இருந்தார். இதனால் அவர் பொறுமையாக தனது சகோதரரை ரெயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டார். ஆனால், ரெயில் இவர்களுக்காக பொறுமையாக
நிற்கவில்லை. இவர்கள் இறங்கியதும் ரெயில் எழும்பூருக்கு புறப்பட்டு விட்டது. இதனால் சூர்யா தனது உடைமைகளை ரெயிலிலே தவற விட்டுவிட்டார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த அவர், அருகில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ் நிலையத்தில் நடந்த விவரத்தை கூறினார்.
இதையடுத்து தாம்பரம் ரெயில்வே பாதுகாப்புப்படையினர், எழும்பூர் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாய்லீலா, நடைமேடைக்கு வந்த ரெயிலில் ஏறி அவர்களது உடைமைகளை பத்திரமாக மீட்டார்.அந்த பைகளில் இருந்து விலையுயர்ந்த 2 லேப்-டாப்களும் பத்திரமாக மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.5 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து ரெயிலில் பைகளை தவறவிட்ட சூர்யா மற்றும் அவரது சகோதரரை எழும்பூர் போலீஸ் நிலையம் வரவழைத்து, அவர்களிடம் அதனை சாய்லீலா பத்திரமாக கொடுத்து அனுப்பினார்.
Related Tags :
Next Story