சென்னை பெரம்பூரில் தேவை இன்றி சுற்றியவர்களுக்கு நடத்திய கட்டாய கொரோனா பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதி; 15 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு
சென்னை பெரம்பூரில் தேவை இன்றி சுற்றியவர்களுக்கு நடத்திய கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. சென்னை பெரம்பூரில் முரசொலிமாறன் மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார், அத்தியாவசிய தேவை இன்றியோ, உரிய ஆவணங்கள் இன்றியோ, முக கவசம் சரியாக அணியாமல் சாலையில் வலம் வந்தவர்களை வழிமறித்து அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தி நூதன நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, நேற்று முன்தினம் வாகன ஓட்டிகள் 48 பேருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. நேற்றும் 60-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 48 பேரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரை உடனடியாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தொடர்புகொண்டு, அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 15 நாட்கள் அவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்படுகிறார்கள். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். ஒருவேளை இவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாமல் இருந்தால் இவர்களால் பலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
போலீசாரின் கட்டாய பரிசோதனையில் இவர்கள் கண்டறியப்பட்டதால் பலரது உடல்நலம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இதேபோல தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டால் மிகவும் நல்லது என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story