கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2021 6:38 PM IST (Updated: 5 Jun 2021 6:38 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை ஊழியரை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 26). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரும், இவரது நண்பரான வினித் (23) என்பவரும் நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் ஏனாதிமேல்பாக்கத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஏனாதிமேல்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு ஏற்கனவே ஒரு மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 3 பேர் மூர்த்தி சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் மேற்கண்ட 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாகவும், தங்களது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் கொடுத்து விட்டு போகும்படி மிரட்டல் விடுத்தனர்.

இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூர்த்தியை மேற்கண்ட 3 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி வெட்டு காலனியை சேர்ந்த அமர்கவி (20), அயநல்லூரை சேர்ந்த அருண் (20) மற்றும் 17 வயது கொண்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Next Story