கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்க கோரிக்கை
கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து கடிதம் வழங்கிய காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடக கவர்னர் வஜூபாய் வாலாவை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் பெங்களூருவில் நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஒரு கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்புமாறு கூறி வழங்கினர். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு மக்களை பாதுகாக்காமல் கைவிட்டுள்ளது. கொரோனா நெருக்கடி நிலையை மத்திய அரசு சர்யான முறையில் நிர்வகிக்கவில்லை. இந்த வைரசிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது தான். தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசு சரியான முறையில் மேற்கொள்ளவில்லை. இது மக்களுக்கு தடுப்பூசி போடுவதில் தேக்க நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பிற நாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதமே ஆர்டர் கொடுத்தது. ஆனால் நமது மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் தான் தடுப்பூசி கொள்முதல் பணிகளை தொடங்கியது. மத்திய-மாநில அரசுகள் இதுவரை 30 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு மட்டுமே ஆர்டர் வழங்கியுள்ளன. நமது நாட்டில் 140 கோடி பேர் உள்ளனர். ஒரே தடுப்பூசியை பல்வேறு விலைகளில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது சரியல்ல.
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவது மத்திய அரசின் கடமை ஆகும். நாட்டில் தற்போது தினமும் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதே நிலையில் தடுப்பூசியை வழங்கினால், மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட நீண்ட காலம் ஆகும். நாட்டில் தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க வேண்டும். மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசியை வழங்க வேண்டும். இதுகறித்து தாங்கள் மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவர்கள் எச்.கே.பட்டீல். ஆர்.வி.தேஷ்பாண்டே, ராமலிங்கரெட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story