மோசமான வானிலை காரணமாக டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறக்கம்
மோசமான வானிலை காரணமாக டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரை இறக்கப்பட்டது. எச்.ஏ.எல். விமான நிலையம் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு.
பெங்களூரு,
தாவணகெரேயில் நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவசங்கரப்பா எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு கொரோனா இலவச தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு, அந்த பணியை தொடங்கி வைத்தார். அப்போது டி.கே.சிவக்குமாரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு ஹெலிகாப்டரில் பெங்களூரு வந்தனர். பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பகல் 3 மணிக்கு மேல் மழை பெய்யத்தொடங்கியது. அதற்கு முன்பு வானம் மேகமூட்டமாக இருந்தது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டிய நிலை காணப்பட்டது.
இந்த சூழ்நிலையால் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டர் பெங்களூருவை நெருங்கியபோது, வானிலை மோசம் அடைந்தது. இதன் காரணமாக எச்.ஏ.எல். விமான நிலையத்தில் அந்த ஹெலிகாப்டர் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து வழியில் நெலமங்களா அருகே டி.பேகூர் அருகே, 4 ஏக்கர் நிலப்பரப்பில் ஹெலிகாப்டரை விமானி அவசரமாக தரை இறக்கினார்.
இதனால் எந்த பாதிப்பும் இன்றி டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள், கார் மூலமாக அங்கிருந்து பெங்களூரு வந்தனர். முன்கூட்டியே எந்த தகவலும் இன்றி ஹெலிகாப்டர் தரை இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story