800 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி


800 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி
x
தினத்தந்தி 5 Jun 2021 9:51 PM IST (Updated: 5 Jun 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில், 800 அடி பள்ளத்தில் பாய்ந்து லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி:

800 அடி பள்ளத்தில்...

கொடைக்கானல் ஆனந்தகிரி முதல்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 53). லாரி டிரைவர். நேற்று அதிகாலை இவர்,  பழனியில்  இருந்து டிப்பர் லாரியில் எம்.சான்ட் மணல் ஏற்றிக் கொண்டு கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்தார். 

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் பெருமாள்மலை அருகே மேல்பள்ளம் என்னுமிடத்தில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது.

லாரியை கட்டுக்குள் கொண்டு வர சேகர் முயற்சித்தார். இருப்பினும் அவரால் முடியவில்லை. இதனால் லாரியில் இருந்து சேகர் கீழே குதித்தார். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் 800 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது.

சிறிதுநேரத்தில் லாரி தீப்பிடித்தது. பயங்கர சத்தத்துடன் என்ஜின் பகுதி வெடித்து சிதறியது. இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு சேகர் தகவல் தெரிவித்தார்.

  எலும்புக்கூடான லாரி

அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் வனப்பகுதியில் லாரி விழுந்து தீப்பிடித்ததால், வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

தற்போது மழை பெய்து வருவதால் லாரியில் பிடித்த தீ வனப்பகுதிக்கு பரவவில்லை. இதனால் பெரும் காட்டுத்தீ தடுக்கப்பட்டது. அதேநேரத்தில் தீப்பிடித்ததில் அந்த லாரி எலும்புக்கூடானது.

800 அடி பள்ளத்தில் லாரி விழுந்து எரிந்ததால் அதை மீட்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான பணி நடந்து வருகிறது. 

இதற்கிடையே லாரியில் இருந்து குதித்ததில் சேகர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 800 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் மேல்பள்ளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story