ஊத்துக்குளியில் கொரோனாவுக்கு சப் இன்ஸ்பெக்டர் சாவு
ஊத்துக்குளியில் கடந்த வாரம் கொரோனாவுக்கு மகன் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது தந்தையான சப்-இன்ஸ்பெக்டரும் தொற்றால் உயிரிழந்தார்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளியில் கடந்த வாரம் கொரோனாவுக்கு மகன் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது தந்தையான சப்-இன்ஸ்பெக்டரும் தொற்றால் உயிரிழந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூரை சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் (வயது 58). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாறுதல் பெற்று வந்தார். தனது மனைவி விஜயகுமாரி (53), மகள் சர்வினி (25), மகன் சரண் (23) ஆகியோருடன் ஊத்துக்குளி அருகே உள்ள கொடியம்பாளையம் நால்ரோடு ஸ்ரீநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
விஜயகுமாரி இல்லத்தரசியாகவும், சர்வினி மற்றும் சரண் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை தேடிக்கொண்டு இருந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் பொதுமக்களை காக்கும் பணியில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். இதன் காரணமாக கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று
அதேபோல் அவரது மனைவி விஜயகுமாரி மற்றும் மகன் சரண் ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன், மனைவி விஜயகுமாரி மற்றும் மகன் சரண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 15-ந் தேதி 3 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
விஜயகுமாரி கொரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமாகி வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் மற்றும் அவரது மகன் சரண் இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரண் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 27-ந்தேதி உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து நேற்று சப்-இன்ஸ்பெக்டர் கோபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஊத்துக்குளி சப்-இன்ஸ்பெக்ரின் மகன் இறந்து 10 நாட்களுக்குள் சப்-இன்ஸ்பெக்டரும் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story