ரூ.40 கோடிக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கொள்முதல் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
ரூ.40 கோடிக்கு கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து கொள்முதல் செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி வினியோகம் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அஸ்வத் நாராயண் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள மேற்கு மண்டலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த மண்டலத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இன்னும் 1 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட வேண்டியுள்ளது.
மல்லேசுவரம், கோவிந்தராஜ்நகர், தாசரஹள்ளி, யஷ்வந்தபுரா, சாம்ராஜ்பேட்டை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் மொத்தம் 23.72 லட்சம் பேர் உள்ளனர். இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 78 ஆயிரத்து 836 ஆகும். இவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எங்களிடம் போதுமான அளவுக்கு தடுப்பூசி கையிருப்பு உள்ளது. தினசரி ஒதுக்கப்படும் தடுப்பூசியை அன்றைய தினமே வினியோகம் செய்ய வேண்டும். தடுப்பூசி போடுவதில் யாரும் அலட்சியமாக செயல்பட முடியாது. உயிர்கொல்லியான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது தான். மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ரூ.40 கோடிக்கு கருப்பு பூஞ்சை நோய்கான மருந்தை கொள்முதல் செய்யப்படும். இந்த மருந்து வினியோகம் இன்று (நேற்று) முதல் தொடங்க உள்ளது. அதனால் அடுத்து வரும் நாட்களில் இந்த மருந்து பற்றாக்குறை குறையும். கர்நாடகத்தில் இதுவரை 1,500 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருக்கிறது. அதனால் அதிகளவில் மருந்து வாங்கப்படுகிறது. இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
இந்த பேட்டியின்போது, பெங்களுரு மாநகராட்சி சுகாதாரத்துறை சிறப்பு கமிஷனர் ராஜேந்திர சோழன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story