திண்டிவனம், செஞ்சியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
மழை
திண்டிவனம்,
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை கடும் வெயில் சுட்டெரித்தது. சில நிமிடங்களில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டன. குளிர்ந்த காற்று வீசியது. மதியம் 2.30 மணி முதல் மாலை 3.30 வரை சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் பலத்த மழை கொட்டியது. இதனால் ரெயில்வே மேம்பாலம் கீழ் பகுதி, மரக்காணம் சாலை, நேருவீதி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி யது. திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மரங்கள் விழுந்தன. இந்த மழையினால் ஒரு மணி நேரம் திண்டிவனம் நகரில் மின்தடை ஏற்பட்டது. இந்த திடீர் மழையால் திண்டிவனம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை செஞ்சி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் செஞ்சி நகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. செஞ்சி பஸ் நிலைய வளாகம் உள்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் இந்த மழையின்போது செஞ்சியில் மின்தடை ஏற்பட்டது.
இதேபோல் மேல்மலையனூர், மயிலம், விழுப்புரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story