திருவண்ணாமலை, வேட்டவலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
திருவண்ணாமலை, வேட்டவலம், கீழ்பென்னாத்தூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
வேட்டவலம்
பலத்த மழை
வேட்டவலத்தில் நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை சுமார் 1.30 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
கீழ்பென்னாத்தூர்
இதேபோல் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 30 நிமிடங்களுக்கு மழை பெய்தது. மேலும் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதன் காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக பகலில் வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று இரவும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை லேசான சாரல் மழை பெய்தது.
மேலும் நேற்று முன்தினம் தண்டராம்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 62 மில்லி மீட்டர்மழை அளவு பதிவாகி இருந்தது. அதேபோல் செங்கத்தில் 26 மில்லி மீட்டரும், கீழ்பென்னாத்தூரில் 11.4 மில்லி மீட்டரும் மழை அளவு பதிவாகி இருந்தது.
Related Tags :
Next Story