ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராட்சத முதலை


ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராட்சத முதலை
x
தினத்தந்தி 5 Jun 2021 10:48 PM IST (Updated: 5 Jun 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர்.

மணல்மேடு:
மயிலாடுதுறை அருகே ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராட்சத  முதலையை பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கட்டி வைத்தனர். 
ஊருக்குள் புகுந்த முதலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சித்தமல்லி கிராமம் உள்ளது. இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. ஆற்றில் நீரோட்டம் அதிகம் இருக்கும் போது முதலைகள் அடிக்கடி ஆற்றில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேறிய 10 அடி நீளமுள்ள ராட்சத முதலை சித்தமல்லி கிராமத்துக்குள் புகுந்தது. மரக்கட்டையை போல சாலையின் குறுக்கே கிடந்த இந்த முதலையை  கண்ட மக்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது திடீரென முதலை பொதுமக்களை நோக்கி ஆவேசமாக சீறியது. இதனால் அச்சமடைந்த மக்கள் பின்வாங்கினர். 
கயிற்றில் சிக்கியது
இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நீளமான கயிறுகளை கொண்டு வந்து அதில் சுருக்கு அமைத்து முதலையின் மீது கயிற்றை வீசி மிகவும் லாவகமாக முதலையை சுருக்கில் சிக்க வைத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அந்த முதலையை அருகே உள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். கயிற்றில் சிக்கிய முதலை சுமார் 10 அடி நீளம் இருந்ததால் அதிக வலிமையுடன் கயிற்றில் இருந்து தப்ப முயன்றது. ஆனால் அதன் உடலில் கயிறு வலுவாக சிக்கி இருந்ததால் முதலையால் தப்ப முடியவில்லை. முதலை பிடிபட்டதை அறிந்த சுற்று வட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்துக்கு வந்து முதலையை பார்த்தனர். 
பரபரப்பு
இது குறித்து போலீசாருக்கும், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கயிறு மூலம் முதலையின் வாயை கட்டி பாதுகாப்பாக முதலையை மீட்டு  வாகனத்தில் ஏற்றி அணைக்கரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் கொண்டு சென்று விட்டனர். அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்த ராட்சத முதலையால் சி்த்தமல்லி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story