ராயக்கோட்டை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்குப்போட்டு தற்கொலை
ராயக்கோட்டை அருகே குடும்பத்தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராயக்கோட்டை:
குடும்பத்தகராறு
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி கல்லுகான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 30). இவரது மனைவி முத்தம்மாள் (26). இவர்களுக்கு பவித்ரா (8), காவியா (7) என்ற 2 மகள்களும், தனுஷ் (5) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக முத்தம்மாள் கணவரிடம் கோபித்து கொண்டு ராயக்கோட்டை அருகே சஜ்ஜலபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் சண்முகத்தின் குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்றும் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் முத்தம்மாள் மனமுடைந்து காணப்பட்டார்.
அப்போது திடீரென வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குழந்தைகள் காவியா, தனுசுக்கு கொடுத்தார். பின்னர் முத்தம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமி பவித்ரா விளையாடுவதற்கு வெளியே சென்றிருந்தாள்.
இதனிடையே விஷம் கொடுக்கப்பட்ட குழந்தைகள் வலியால் அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது முத்தம்மாள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் கல்லுகான்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய முத்தம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தகராறு காரணமாக 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ராயக்கோட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story