கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2.30 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-விதிமுறைகளை மீறியதாக ரூ.1.47 கோடி வசூல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3,514 பேருக்கு சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 34 ஆயிரத்து 441 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 30 ஆயிரத்து 708 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 219 பேர் உயிர் இழந்துள்ளனர். 3 ஆயிரத்து 514 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 187 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 449 பேரும், பிற மாவட்ட மருத்துவமனைகளில் 43 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதைத்தவிர சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
2.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி
மாவட்டத்தில் தொடங்கப்பட்ட தற்காலிக கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களான பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் 93 பேரும், ஓசூர் பட்டு வளர்ச்சித்துறை பயிற்சி மையத்தில் 20 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் வரையில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 874 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக ரூ.1 கோடியே 47 லட்சத்து 36 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story