சிதம்பரத்தில் உரிய அனுமதி பெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு பூட்டு அதிகாரிகள் நடவடிக்கை
சிதம்பரத்தில் உரிய அனுமதிபெறாமல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் உசுப்பூரில் உள்ள முருகேசன் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு, அரசு அனுமதி பெறாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் சப்-கலெக்டர் மது பாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கிராம நிர்வாக அலுவலர்கள் சிதம்பரம் ரமேஷ், உசுப்பூர் சங்கரன், சிதம்பரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் அதிகாரிகள் முருகேசன் நகரில் இயங்கி வந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று, விசாரணை நடத்தினர்.
6 பேருக்கு சிகிச்சை
அப்போது அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் அவர்களுக்கு போதிய அளவில் ஆக்சிஜன் வசதி எதுவும் செய்து கொடுக்காமலும், உரிய அனுமதி பெறாமலும் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 6 பேரையும் ஆம்புலன்ஸ் மூலமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
மேலும் சப்-கலெக்டரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் மருத்துவமனையை திறக்க கூடாது என்று அங்கிருந்த டாக்டரை அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story