கொரோனாவால் பலியான தொழிலாளியின் இறப்பு சான்றிதழ் மாற்றி வழங்கியதாக புகார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான பனியன் நிறுவன தொழிலாளிக்கு இறப்பு சான்றிதழ் மாற்றி வழங்கியதாக புகார் தெரிவித்து, அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருப்பூர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான பனியன் நிறுவன தொழிலாளிக்கு இறப்பு சான்றிதழ் மாற்றி வழங்கியதாக புகார் தெரிவித்து, அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் நேற்று குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொழிலாளிக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் மாவட்டத்தில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக திருப்பூர் மாநகரம் இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய வார்டு என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா 2-வது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுகிற பலருக்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது. இதனால் பலரும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள். இந்நிலையில் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு திருநீலகண்டபுரத்தை சேர்ந்தவர் பனியன் நிறுவன தொழிலாளியான மணிவேல் (வயது 45) உடல்நிலை கடந்த வாரம் சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி கிருஷ்ணவேனி அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் மணிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இறப்பு சான்றிதழை மாற்றி வழங்கியதாக புகார்
இதனைத்தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனது கணவரை அவர் அழைத்து வந்தார். தொடர்ந்து அங்கு கொரோனா வார்டில் ஆக்சிஜன் வழங்கப்பட்டு மணிவேலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் ஐ.சி.யு. வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி அவர் கடந்த 1-ந் தேதி பலியானார். அவரது உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் பின்னர் மணிவேலுக்கு அரசு மருத்துவமனை சார்பில் இறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்டு குடும்பத்தினர் வீட்டிற்கு வந்துவிட்டனர். இதற்கிடையே நேற்று அந்த இறப்பு சான்றிதழை அவர்கள் பார்க்கும் போது, அதில் மணிவேல் நிம்மோனியா காய்ச்சலால் இறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தொடந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவருக்கு இறப்பு சான்றிதழை அரசு மருத்துவமனை மாற்றி வழங்கியதாக புகார் கூறியும், கொரோனாவால் இறந்ததாகக்கூறி சான்றிதழ் வழங்கக்கோரியும் நேற்று அரசு மருத்துவமனையில் கிருஷ்ணவேனி தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பலி எண்ணிக்கையை குறைக்க...
இது குறித்து கிருஷ்ணவேனி கூறியதாவது:-
எனது கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானார். ஆனால் இறப்பு சான்றிதலில் நிம்மோனியா காய்ச்சல் பாதிப்பால் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இறந்தவருக்கு இவ்வாறு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக பலருக்கும் இவ்வாறு சான்றிதழ் அரசு மருத்துவமனையில் கொடுக்கிறார்கள். எனவே எனது கணவருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக சான்றிதழ் வழங்க வேண்டும். இதுபோல் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டுள்ள சான்றிதழ்களை பலரும் நன்றாக கவனித்து வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story