தொற்று இல்லா தமிழ்நாடு உருவாக அனைத்து அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்


தொற்று இல்லா தமிழ்நாடு உருவாக அனைத்து அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 5 Jun 2021 11:40 PM IST (Updated: 5 Jun 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தொற்று இல்லா தமிழ்நாடு உருவாக அனைத்து அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்

கோவை

அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று இல்லா தமிழ்நாடு உருவாக அனைத்து அரசு அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு பேசினார்.

ஆய்வு கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால்  கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. 

எனவே கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடத்தினார்.


இதில் மாவட்டங்களில் ஏற்படுத்த வேண்டிய மருத்துவ கட்டமைப்புகள், மருந்துகளின் இருப்பு, ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை, கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விவரங்கள், கிராம அளவிலான குழுக்களின் பணி உள்ளிட்டவை குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கட்டுப்பாட்டு மையங்கள்

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு கூறியதாவது
கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களை, அவர்கள் சார்ந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கூடிய பல்வேறு சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசிகளே கொரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரையும் காக்கும் கேடயம் ஆகும். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் தவறாது பின்பற்ற வேண்டும். அத்தியாவசிய காரணங்களைத்தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 

கொரோனா தொற்றால் பாதிக்கப் படுபவர்களுக்கு உடனடி அவசர உதவி அளிக்கும் வகையில் சென்னையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது போலவே, அனைத்து மாவட்டங்களிலும் தற்போது கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இணைந்து பணியாற்ற வேண்டும்

தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சமடைந்து வந்த நிலையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் பலனாக கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இனி வரும் நாட்காளில் கொரோனா தொற்று பரவல் முற்றிலும் குறைந்து தொற்று இல்லா தமிழ்நாடு என்பதை இலக்காக கொண்டு அனைத்து அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறுஅவர் கூறினார்.

முன்னதாக கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளையும், அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள சிறப்பு வசதிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story