அரவக்குறிச்சி அருகே சிமெண்டு தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியை பலி
அரவக்குறிச்சி அருகே சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தடுப்பு மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியை பலியானார். அவரது கணவர் மற்றும் மகன் படுகாயம் அடைந்தனர்.
அரவக்குறிச்சி
கல்லூரி பேராசிரியை
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 45). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (41). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன் வேது (9). கொரோனா பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் ராமலட்சுமி தனது கணவர் மற்றும் மகனுடன் பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான விருதுநகருக்கு வந்து தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை கணேஷ், ராமலட்சுமி, வேது ஆகிய 3 பேரும் விருதுநகரில் இருந்து பெங்களூருவிற்கு ஒரு காரில் புறப்பட்டனர். காரை கணேஷ் ஓட்டினார்.
பலி
அந்த கார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிபட்டிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது நிலைதடுமாறிய கார் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தடுப்பு மீது மோதி எதிர்புறத்தில் உள்ள சாலையில் உருண்டு சென்று பலத்த சேதம் அடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ராமலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேஷ், வேது ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
போலீசார் விசாரணை
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயம் அடைந்த கணேஷ், வேது ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் ராமலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story