கரூர் மாவட்டத்தில் ரூ.1½ கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பு ஆய்வு


கரூர் மாவட்டத்தில் ரூ.1½ கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி மாவட்ட கண்காணிப்பு ஆய்வு
x
தினத்தந்தி 6 Jun 2021 12:37 AM IST (Updated: 6 Jun 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. இதனால் கரூர் மாவட்டத்தில் ரூ.1½ கோடியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் தெரிவித்தார்.

கரூர்
தூர்வாரும் பணி ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள புகளூர் வாய்க்கால் பகுதிகளான நொய்யல், முத்தனூர், நஞ்சைப்புகளூர் ஆகிய பகுதிகளிலும், நெரூர் வாய்க்கால் பகுதிகளான செவ்வந்திப்பாளையம், முனியப்பனூர் மற்றும் நெரூர் ஆகிய பகுதிகளிலும், கள்ளப்பள்ளி வாரி, பிள்ளபாளையம் வாரி, கோட்டைமேடு வாரி மற்றும் இனுங்கூர் வாரி ஆகிய வடிகால் வாரிகளிலும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அதிகாரி விஜயராஜ்குமார் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்வதற்காக கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்களை ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் 2 வாய்க்கால்கள் மற்றும் 8 வடிகால் வாரிகளை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதுகாக்கப்படும்
புகளூர் மற்றும் நெரூர் பாசன வாய்க்கால்களை தூர்வாருவதன் மூலம் பாசன வாய்க்காலில் திறக்கப்படும் நீரை கடைமடை வரை தங்கு தடை இன்றி வழங்க இயலும். இதன் மூலம் நன்னியூர், வாங்கல், நெரூர், கோம்புபாளையம் மற்றும் புகளூர் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 9,704 ஏக்கர் பாசன நிலங்கள் முழுவதும் பாசன வசதி பெறுவது உறுதி செய்யப்படும்.
மேலும், மேற்கண்ட வடிகால்வாரிகளில் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர்கள் உள்ளதால் மழை காலங்களின் வெள்ள நீர் செல்ல இயலாத நிலையில் உள்ளது. மேற்கண்ட வடிகால் வாரிகளை தூர்வாருவதன் மூலம் வெள்ள நீர் தேங்காமல் எளிதாக வடிந்து அருகில் உள்ள பாசன நிலங்களில் பயிர் சேதம் ஏற்படமால் பாதுகாக்கப்படும். இதன் மூலம் 12 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெள்ளநீர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படும். 
பருவ மழைக்கு முன்பு...
தூர்வாரும் பணிகள் 30 சதவீதம் முடிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட புகளூர் மற்றும் நெரூர் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை காவிரியில் பாசனத்திற்கு நீர் திறப்புக்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வடிகால் வாரிகள் தூர்வாரும் பணியினை பருவ மழைக்கு முன்பு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவிப்பொறியாளர்கள் ஸ்ரீதர், கார்த்திக் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story