நெல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை


நெல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 6 Jun 2021 1:59 AM IST (Updated: 6 Jun 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

நெல்லை,:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லையில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், நடமாடும் வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுகாதார துறையினரும் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் சுற்றி திரிகிறவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதுடன், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்கின்றனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்படுகிறது. நெல்லையில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போலீசாரின் சோதனைச்சாவடிகளின் அருகில் சுகாதார துறையினரும் தயாராக உள்ளனர். அவர்கள், ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்துகின்றனர்.

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் அத்தியாவசிய தேவைக்கு மாறாக மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்த வியாபாரிகளுக்கு சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில், சுகாதார துறையினர் உடல்வெப்பநிலை, காய்ச்சல் பரிசோதனை நடத்தினர்.

Next Story