கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஓய்வெடுக்கும் ஆம்புலன்சுகள்


கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஓய்வெடுக்கும் ஆம்புலன்சுகள்
x
தினத்தந்தி 6 Jun 2021 4:53 AM IST (Updated: 6 Jun 2021 4:53 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சுகள் ஓய்வெடுக்கின்றன.

சேலம்:
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறைந்ததால் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சுகள் ஓய்வெடுக்கின்றன.
கடும் தட்டுப்பாடு
சேலம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகள் தேவைபட்டது. ஆனால் ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 
இரவு, பகல் என 2 நாட்களுக்கு மேலாக காத்திருந்த பிறகே ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நோயாளிகளுக்கு கிடைக்கும். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம் முன்பு தினமும் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் மரண ஓலங்களும், ஆம்புலன்சில் சத்தங்களும் கேட்கக் கூடிய அளவிற்கு நோய் தொற்று சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.
படுக்கை வசதிகள்
இந்த நிலையில், சேலம் அருகே இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காத்திருந்த கொரோனா நோயாளிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் இரும்பாலை வளாகத்தில் உள்ள சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. 
மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சில் காத்திருக்க வேண்டிய நிலைமை தற்போது ஏற்படவில்லை. தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆக்சிஜன் தேவைப்படக்கூடிய நோயாளிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஆஸ்பத்திரி முன்பு ஆம்புலன்சுகள் இல்லாத நிலையே காணப்படுகிறது. 
ஓய்வெடுக்கும் ஆம்புலன்சுகள்
ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆக்சிஜன் கூடிய தனியார் ஆம்புலன்சுகள் வரிசையாக காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதங்களாக ஓய்வின்றி உழைத்த ஆம்புலன்ஸ்கள் தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பது போல் காட்சி அளிக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் தீவிரம் வேகமாக குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story