மேலும் ஒருவருக்கு கரும்பூஞ்சை தொற்று


மேலும் ஒருவருக்கு கரும்பூஞ்சை தொற்று
x
தினத்தந்தி 5 Jun 2021 11:25 PM GMT (Updated: 5 Jun 2021 11:25 PM GMT)

ராமநாதபுரத்தில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அச்சம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரும்பூஞ்சை தொற்றுநோய் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கீழக்கரையை சேர்ந்த ஒருவர் பலியானதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பரமக்குடி மற்றும் திருவாடானை பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் வித்தானூர் பகுதியை சேர்ந்த அர்ச்சுணன் (வயது 56) என்பவர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீட்டிற்குச் சென்ற நிலையில் அவருக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு இருந்ததை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பலரும் கரும்பூஞ்சை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரும்பூஞ்சை
இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சித்தார்கோட்டை ரமலான் நகர் பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கரும்பூஞ்சை அறிகுறி இருப்பதாக அறிந்து உடனடியாக அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story