ராமேசுவரம்-தனுஷ்கோடி கடற்பகுதியில் கடலோர காவல்படை விமானம் ரோந்து
ராமேசுவரம்-தனுஷ்கோடி கடற்பகுதியில் கடலோர காவல்படை விமானம் ரோந்து
ராமேசுவரம்
ராமேசுவரம் கடல் பகுதியில் தாழ்வாக பறந்தபடி இந்திய கடலோரக் காவல் படையின் அதிவேக விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டது.
காவல்படை விமானம்
தமிழகத்திலேயே ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிக்கு மிக அருகாமையில் இலங்கை கடல் பகுதி உள்ளதாலும் அவ்வப்போது ராேமசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதும், அங்கிருந்து தமிழகத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்தப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருவதால் இந்த கடல் பகுதி மிக முக்கியமான பகுதியாக உள்ளது.
அதுபோல் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான இரண்டு அதிவேக ரோந்து கப்பல் மற்றும் 3 ஹோவர கிராப்ட் கப்பலும் இரவு பகலாக மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர ராமேசுவரம் கடற்படை முகாமில் உள்ள இரண்டு ரோந்து படகும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. உச்சிப்புளியில் உள்ள பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது.
காரணம் என்ன?
இந்தநிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான அதி நவீன விமானம் ஒன்று சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மண்டபம், ராமேசுவரம் தனுஷ்கோடி, தொண்டி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதி முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. குறிப்பாக ராமேசுவரம்-தனுஷ்கோடி வரையிலான இந்திய கடல் எல்லை வரையிலும் மிகவும் தாழ்வாக பறந்தபடி இந்த விமானம் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
முக்கியமான தகவல்கள் ஏதேனும் வரும் பட்சத்தில் மட்டும்தான் இதுபோன்று சென்னையிலிருந்து இந்திய கடலோர காவல் படையின் விமானம் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடல் பகுதியில் பெரிய சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கியதுடன் அந்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடல்நீர் பச்சை நிறமாக மாறியதாக இலங்கை கடற்படை வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதனால் இந்திய கடல் பகுதியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவோ அல்லது வேறு ஏதேனும் வழக்கமான பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கடலோர காவல்படை விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதே விமானம் ராமேசுவரம் தனுஷ்கோடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கடல் பகுதியில் தாழ்வாக பறந்தபடி ரோந்து பணியில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story