முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வெளியாட்கள் வர தடை
வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாகன்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
கூடலூர்
வண்டலூரில் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாகன்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
உணவு வழங்கும் முறையில் மாற்றம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமின்றி விலங்குகளையும் தாக்குகிறது. சமீபத்தில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்தது.
இதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் கள இயக்குனர் கவுசல் நேற்று ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் வனச்சரகர்கள் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதில், தினமும் பாகன்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் மாலை வேளையில் வளர்ப்பு யானைகளை ஒன்றாக அழைத்து வந்து உணவு வழங்கும் முறையை தவிர்த்து, தனித்தனியாக அழைத்து வந்து உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
வெளியாட்கள் வர அனுமதி இல்லை
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள யானைகளுக்கு கொரோனா இல்லை. பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
வெளியாட்கள் முகாமிற்கு வர அனுமதி கிடையாது. மேலும் யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story