சென்னை பாரிமுனையில் கோவிலில் சாமி கும்பிட்ட ‘காண்டிராக்டர்’ பலி - ‘காங்கிரீட்’ பலகை பெயர்ந்து விழுந்ததால் பரிதாபம்


சென்னை பாரிமுனையில் கோவிலில் சாமி கும்பிட்ட ‘காண்டிராக்டர்’ பலி - ‘காங்கிரீட்’ பலகை பெயர்ந்து விழுந்ததால் பரிதாபம்
x
தினத்தந்தி 6 Jun 2021 5:42 AM IST (Updated: 6 Jun 2021 5:42 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பாரிமுனையில், கோவிலின் வெளியே நின்று சாமி கும்பிட்டபோது ‘காங்கிரீட்’ பலகை பெயர்ந்து விழுந்து, ‘காண்டிராக்டர்’ பரிதாபமாக இறந்தார்.

பெரம்பூர்,

சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன் (வயது 54). இவர், சென்னை பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைத்து உள்ளார். மேலும் இவர், இங்குள்ள அரசு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஜெராக்ஸ் மற்றும் கம்ப்யூட்டரில் டைப் செய்து, நகல் எடுத்து கொடுப்பது போன்ற பணிகளை செய்து வந்தார்.

‘காண்டிராக்டர்’ திவாகரன், நேற்று காலை ஜெராக்ஸ் கடையை திறக்க வந்தார். முன்னதாக பாரிமுனை தம்புச்செட்டி தெரு-எரப்பாலு சிட்டி தெரு சந்திப்பில் உள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் கோவில் எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஊரடங்கால் பூட்டிக்கிடக்கும் பிள்ளையார் கோவிலின் வெளியே நின்றபடி, சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென பழமையான அந்த பிள்ளையார் கோவிலின் முன்புறம் உள்ள ‘காங்கிரீட்’ பலகை திடீரென பெயர்ந்து விழுந்தது. அங்கு சாமி கும்பிட்டு கொண்டிருந்த திவாகரன் மீது ‘காங்கிரீட்’ பலகை விழுந்ததால், இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்த திவாகரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த எஸ்பிளனேடு போலீசார், இடிபாட்டில் சிக்கி கிடந்த திவாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story