கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரி தீ விபத்தின்போது துரித செயல்பாடு: செவிலியர் ஜெயக்குமாரை, மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு


கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரி தீ விபத்தின்போது துரித செயல்பாடு: செவிலியர் ஜெயக்குமாரை, மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு
x
தினத்தந்தி 6 Jun 2021 6:00 AM IST (Updated: 6 Jun 2021 6:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரியில் நடந்த தீ விபத்தின்போது துரிதமாக செயல்பட்டு குழந்தைகள், தாய்மார்களின் உயிரை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமாரை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி மகப்பேறு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் கடந்த மாதம் 26-ந்தேதி இரவு மின்கசிவு ஏற்பட்டு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் 36 பச்சிளங் குழந்தைகள் இன்குபேட்டரிலும், 11 குழந்தைகளுடன் தாய்மார்களும் என 47 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணியில் இருந்த செவிலியர் ஜெயக்குமார் என்பவர், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, தீ அணைப்பான்களை கொண்டு தீயை அணைத்தார். தீயணைப்புப் படைவீரர்கள் வரும் முன்னதாகவே, துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்து அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களை பத்திரமாக காப்பாற்றினார்.

இந்த நிகழ்வு குறித்து அறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், செவிலியர் ஜெயக்குமாரை நேற்று தனது இல்லத்துக்கு நேரில் அழைத்து, அவரது செயலைப் பாராட்டி சிறப்பு செய்தார்.

இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., செவிலியர் ஜெயக்குமாரின் மனைவியும், நர்சுமான தேவிகா மற்றும் அவரது குழந்தைகள் உடனிருந்தனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story