கொரோனா காலத்திலும் பா.ஜனதாவுக்கு ஆட்சி வெறி: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு
கொரோனா தொற்று காலத்திலும் பா.ஜனதா ஆட்சி வெறி பிடித்து அலைவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கினார்.
ஆட்சி அதிகார வெறி
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் மராத்தி பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா காலத்தில் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். அவர்கள் (பா.ஜனதா) ஏன் அதிகாரத்திற்கு வர நினைக்கிறார்கள் என தெளிவுப்படுத்தாவிட்டால், மக்கள் அவர்களை மன்னிக்கமாட்டார்கள். இந்த கொரோனா காலத்திலும் கூட ஆட்சி அதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட-ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும். முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்து இல்லை.
சிவசேனாவை சேர்ந்த தொண்டனை முதல்-மந்திரி ஆக்குவேன் என எனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் இன்னும் நிறைவேற்றவில்லை. நான் அரசியலில் அதிக நாட்டம் கொண்டவன் இல்லை. தந்தைக்கு உதவியாக இருக்கவே அரசியலுக்கு வந்தேன். எனது ஆட்சியின் போது நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொறுப்புகளை விட்டு நான் ஓடியது கிடையாது. முதல்-மந்திரியாக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொற்காலம் எது?
இதேபோல பா.ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமையுமா என்ற கேள்வி குறித்து அவர் கூறுகையில், "பா.ஜனதா தலைவர்கள் கோபிநாத் முண்டே, பிரமோத் மகாஜன் ஆகியோரின் மறைவுக்கு பிறகு முழுநம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது பா.ஜனதா டெல்லியை மையமாக கொண்டு செயல்படுகிறது. கூட்டணியில் வேறுபாடுகளை நீக்க திறந்தநிலை இருக்க வேண்டும். எனது புதிய கூட்டணி கட்சியினர் எங்களை மரியாதையுடன் நடத்துகின்றனர். மகாவிகாஸ் கூட்டணியில் பல்வேறு வேறுபாடுகள் இருந்தன. எனவே நாங்கள் அதிகம் திறந்தநிலையுடன் இருக்கிறோம். சிவசேனாவும், பா.ஜனதாவும் மராட்டியத்தில் எதிர்க்கட்சிகளாக இருந்த போது ஒன்றாக இந்துதுவா கொள்கையை பிடித்து கொண்டு இருந்தன. அப்போது பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் இருந்தது. பா.ஜனதாவுடனான கூட்டணியில் பொற்காலமாக அது இருந்தது. " என்றார். இதேபோல மற்றொரு கேள்விக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடன் அடிக்கடி போனில் பேசுவார் என பதில் அளித்தார்.
Related Tags :
Next Story