புதுவையில் சபாநாயகர்-அமைச்சர்கள் பதவி யாருக்கு? பாரதீய ஜனதாவில் சிக்கல் நீடிப்பு ரங்கசாமியுடன் மேலிட பார்வையாளர் ஆலோசனை


புதுவையில் சபாநாயகர்-அமைச்சர்கள் பதவி யாருக்கு? பாரதீய ஜனதாவில் சிக்கல் நீடிப்பு ரங்கசாமியுடன் மேலிட பார்வையாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 6 Jun 2021 8:21 PM IST (Updated: 6 Jun 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

சபாநாயகர், அமைச்சர்கள் பதவி யாருக்கு? என்பதில் புதுவை பா.ஜ.க.வில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், ரங்கசாமியுடன் மேலிட பார்வையாளர் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

அதன்பிறகு அமைச்சரவை இடங்களை பங்கிடுவதில் இருகட்சிகளுக்கும் இடையே முடிவு எடுக்கப்படாமல் கடந்த ஒருமாதமாக இழுபறி நிலை இருந்து வந்தது. இதனால் அமைச்சரவை பதவி ஏற்பு தாமதமானது.

ஒரு வழியாக இந்த பிரச்சினையில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் உடன்பாடு செய்து கொண்டன. இதில் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகளை தர ரங்கசாமி ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து 2 கட்சிகளும் தீவிரமாக ஆலோசனை நடத்தின. இதில் ரங்கசாமி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதனால் அந்த கட்சி சார்பில் பதவி ஏற்க உள்ள 3 அமைச்சர்களின் பெயர் பட்டியலை ரங்கசாமி தயார் நிலையில் வைத்துள்ளார். ஆனால் அதுபற்றிய விவரங்களை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் முடிவு செய்துள்ள அமைச்சர்கள் தான் பதவி ஏற்பார்கள் அதில் மாற்றம் இருக்காது என்று என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அமைச்சரவை இடங்களை பகிர்ந்து கொள்வதில் பிடிவாதமாக இருந்து சமரசம் கண்ட நிலையில் அந்த பதவிகளில் யாரை நியமிப்பது என்பதில் பா.ஜ.க. திணறி வருகிறது. இதுதொடர்பாக கட்சியின் மேலிட தலைவர்கள் வருவார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் அதெல்லாம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளரான ராஜீவ் சந்திர சேகர் எம்.பி. நேற்று முன் தினம் புதுவைக்கு வந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அமைச்சர் பதவிகளில் நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோரை நியமிக்கவும், சபாநாயகராக ஏம்பலம் செல்வத்தை நியமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் சபாநாயகர் பதவியை ஏற்க ஏம்பலம் செல்வம் தயக்கம் காட்டியதால் நியமன எம்.எல்.ஏ. ஒருவரை அந்த பதவியில் அமர்த்தலாமா? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் போது நியமன எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் பதவி தருவதா? என எதிர்ப்பு தெரிவித்ததால் பா.ஜ.க.வுக்குள்ளேயே சல சலப்பு ஏற்பட்டது. இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. சந்தித்தார். இருவரும் சுமார் 30 நிமிடம் தனியாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது பா.ஜ.க. சார்பில், அமைச்சராக பதவியேற்பவர்களுக்கு ஒதுக்கப்படும் இலாகாக்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. நேற்று மீண்டும் ஆலோசித்தார்.

அப்போது சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வம் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து மேலிடத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் பா.ஜ.க. சார்பில் பதவி ஏற்கும் அமைச்சர்கள், சபாநாயகர் யார், யார்? என்பது பற்றிய விவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்பின் அமைச்சர்களின் பெயர் பட்டியல் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் ஒப்படைக்கப்படும் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று பிற் பகல் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. மீண்டும் சந்தித்துப் பேசினார். அப்போது சபாநாயகர், அமைச்சர்களாக பதவி ஏற்பவர்களின் பெயர் விவரங்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அமைச்சரவை பதவி ஏற்கும் என்று தெரிகிறது.

Next Story