புதுவை மேட்டுப்பாளையத்தில் தனியார் மருந்து தொழிற்சாலையில் பயங்கர தீ 4 ஊழியர்கள் படுகாயம்
புதுவை மேட்டுப்பாளையத்தில் தனியார் மருந்து தொழிற்சாலையில் தீப் பிடித்து எரிந்ததில் 4 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
புதுச்சேரி,
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 140-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி (ஷிப்ட்) முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் தொழிற்சாலையில் ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையின் முதல் தளத்தில் இருந்த மருந்து உலர்த்தும் ‘ட்ரையர்’ எந்திரம் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அடுத்த சில நொடிகளில் ட்ரையர் எந்திரம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதில் முதல் தளத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் மாயவன், ராஜராஜன், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர்.
இதைப் பார்த்த மற்ற ஊழியர்களும் தொழிற்சாலையில் இருந்து அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். சிலர் ஓடிவந்து காயமடைந்த 4 பேரையும் மீட்டு அங்கிருந்த வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்த கோரிமேடு, புதுச்சேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 4 வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் முதல்தளத்தில் இருந்த ட்ரையர் முற்றிலுமாக எரிந்து நாசமானது. மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களும் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
தீ விபத்தால் மேட்டுப் பாளையம் பகுதியே புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த பொதுமக்கள் தொழிற்சாலை முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சுபம் கோஷ், மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் தொழிற்சாலைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் மருந்து தொழிற்சாலைக்கு சென்று தீ விபத்து பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
தீ விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதே தொழிற் சாலையில் கீழ்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story